Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில் கார்த்திகை பட்டம் கடலை விதைப்பில் விவசாயிகள் தீவிரம்

தா.பழூர், டிச. 11: ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பட்டம் கடலை சிறந்த மகசூல் தரும் என்பது விவசாயிகள் நம்பிக்கை. அதன்படி இந்த ஆண்டு மழை வானிலை அறிக்கையை பின்பற்றி விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தா.பழூர் வட்டாரத்தில் கடந்த 4 வருடங்களாக நிலக்கடலை முளைக்கும் தருவாயில் வேர் அழுகல் நோயின் பாதிப்பு அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேர் அழுகல் பாதிப்பு சமீப காலமாக அறுவடை சமயத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே விவசாயிகள் தவறாமல் பூஞ்சாண கொல்லியை பயன்படுத்தி விதைக்க வேண்டும்.

உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகளான பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பாக்டீரியல் நோய்களான இலைகருகல் மற்றும் இலைபுள்ளி நோய்களை கட்டுப்படுத்தலாம். அடுத்து டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பூஞ்சாண நோய்களான வேர்அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகளான பேசில்லஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடியுடன் உயிரி உரங்களையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ரைசோபியம் என்ற உயிரி உரம் நிலக்கடலையின் வேர்களில் வாழ்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. அதேபோன்று பாஸ்போபாக்டீரியம் என்ற நுண்ணியிரி மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. அதுமட்டுமின்றி வேர்கள் செழித்து வளரவும் திசுக்கள் வளம் பெற்று பயிர் நன்றாக வளரவும் வழிவகை செய்கிறது. 200 கிராம் உயிர் உரக் கலவையான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியத்தை ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி செய்ய இயலாதவர்கள் நேரடியாக தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம். மண்ணில் இடுவதற்கு ஏக்கருக்கு ஒரு கிலோ பேசில்லஸ், ஒரு கிலோ டிரைக்கோடெர்மா, ஒரு கிலோ ரைசோபியம் மற்றும் ஒரு கிலோ பாஸ்போபாக்டீரியத்தை தேவையான அளவு தொழு உரத்துடன் கலந்து கடைசி உழவின் போது வயல் முழுவதும் தூவி விட வேண்டும். இவ்வாறு உயிரி உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு இரசாயன உரங்களின் அளவை 25 சதவீதம் குறைத்து கொள்ள முடியும். அது மட்டுமின்றி 10 லிருந்து 15 சதவீதம் பயிர் விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது. இந்த உயிரி உரங்கள் நமது வேளாண் அறிவியல் மையம் சோழமாதேவியில் விற்பனை செய்யப் படுகிறது. இதற்கு ஆகும் செலவு ஏக்கருக்கு 340 ரூபாய் மட்டுமே.

எனவே நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தவறாமல் மேற்குரிய விதை நேர்த்தி தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதால் அதிக மகசூல் ஈட்டலாம் என்று கிரீடு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், கோ.அழகுகண்ணன் மற்றும் திட்ட உதவியாளர் சி.அறிவு செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.