அரூர், ஜூலை 8: மொரப்பூர், கம்பைநல்லூர், நல்லம்பட்டி பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. 2 மாத பயிரான வெண்டை, பாசன வசதி இருந்தால், 45 நாட்களில் விளைச்சல் தர துவங்கும். தொடர்ந்து இரண்டு மாதம் வரை, ஒரு நாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்தால், 1 ஏக்கரில் நாளொன்றுக்கு 100 முதல் 120 கிலோ வரை விளைச்சல் கொடுக்கும். தர்மபுரி மாவட்டத்தில் கம்பைநல்லூர், மொரப்பூர், தர்மபுரி ஆகிய இடங்களில் மொத்த வியாபாரிகள் மண்டிகள் வைத்து கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிற்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். நாள்தோறும் சுமார் 10 டன் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு, கிலோ ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மொத்த விலையில் ரூ.20க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லரையில் கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement