ஜெயங்கொண்டம், ஜூலை 10: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-விருதாச்சலம் சாலையில் உள்ள தாவூத் பிபி ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான 33 ஏர்ஸ் 82 செண்ட் இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தபோது, உடையார்பாளையம் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது
அப்போது 8ம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆனால், நகராட்சி ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வெளியூர் சென்று விட்டதாக நகராட்சி அலுவலர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் திடீரென நகராட்சி ஆணையரை கண்டித்து ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டதோடு, கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு வந்த டிஎஸ்பி ரவி சக்கரவர்த்தி தலைமையான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் நாளை ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக வாக்குறுதி அளித்தன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.