திருத்தணியில் ஊட்டச்சத்து வேளாண்மை தொடக்க விழா விவசாயிகளுக்கு விதை தொகுப்புகள் மரக்கன்றுகள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
திருத்தணி: திருத்தணி அருகே நடந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு காய்கறி விதை தொகுப்புகள் மற்றும் பரம் மரக்கன்றுகளை எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்.ஊட்டச்சத்து நிறைந்த விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநர் கோமதி மேற்பார்வையில் திருத்தணி அருகே முருக்கம்பட்டு கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. திருத்தணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பிரேம் தலைமை வகித்தார். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சரத்குமார் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் பயனாளிகளுக்கு தக்காளி கத்திரி வெண்டை மிளகாய் கொத்தவரை கீரை விதைகள் அடங்கிய காய்கறி தொகுப்பு பப்பாளி கொய்யா எலுமிச்சை உள்ளிட்ட பழச்செடிகள் பயறு வகைகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை கொண்டு வேளாண்மை உதவி இயக்குநர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆகியோரை அனுகி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் திருத்தணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜய்குமார் பள்ளிப்பட்டு மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பி.டி.சந்திரன் திமுக நிர்வாகி கமல்நாதன் மணி வேளாண்மை உதவி அலுவலர் சீனிவாசன் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் மோகன்ராஜ் உட்பட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.