விருதுநகர், ஜூலை 11: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்கள் வள்ளியம்மாள், முத்துமாரி தலைமையில் மாநில துணைச் செயலாளர் விமலா தேவி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தடுப்பூசி பணியில் இடைநிலை சுகாதார பணியாளர்களை உட்படுத்தும் இயக்குநர் உத்தரவை திரும்ப பெற வேண்டும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
மகப்பேறு மற்றும் சிசு மரணங்கள் உயர்வதை தடுக்க கிராம செவிலியர்களின் நேரத்தையும், உழைப்பையும் முழுமையாக எடுத்துக் கொள்ளும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்ற வேண்டும். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மஞ்சள் காமாலை தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.