Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இரு முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை 95 வயது மூதாட்டிக்கு சிகிச்சை கட்டணத்தை தர வேண்டும்: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, மே 14: சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கமலம்மாள்(95). அரசின் குடும்ப ஓய்வூதியம் பெறும் இவர், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, சுவாசக்குழாய் அழற்சி பாதிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், சிகிச்சை கட்டணத்தை திரும்ப வழங்க கோரி கடந்தாண்டு ஜனவரி 12ம் தேதி நந்தனத்தில் உள்ள ஓய்வூதிய அதிகாரியிடம் விண்ணப்பித்தார். அதை பெற்ற அவர், காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பினார். ஆனால், சிகிச்சை கட்டணத்தை வழங்க கோரி கமலம்மாள் அளித்த விண்ணப்பத்தை, யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் நிராகரித்தது.

பின்னர் 2023ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கமலம்மாளுக்கு, இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்குரிய சிகிச்சை கட்டணத்தை திருப்பி அளிக்க கோரி, கமலம்மாள் அளித்த விண்ணப்பமும், காப்பீடு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, காப்பீடு நிறுவனத்தின் நடவடிக்கையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமலம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை திருப்பி தரக்கோரிய விண்ணப்பத்தை, ஓய்வூதிய அதிகாரி ஏற்று கொண்டும், அவற்றை காப்பீடு நிறுவனம் நிராகரித்துள்ளது.

இரு முறை சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 1,243 ரூபாய் வரை செலவழித்துள்ளார், என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கான காப்பீட்டு தொகையை 3 வாரங்களில் யுனைடட் இந்தியா நிறுவனம் தரவேண்டும், என்று உத்தரவிட்டார். அப்போது, இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தொகையை வழங்குவதற்கான அவகாசத்தை 4 வாரங்களாக மாற்ற வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட நீதிபதி, காப்பீடு தொகையை கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனம் தர தயாராக உள்ளது. ஆனால், அதற்கான அவகாசம்தான் பிரச்னையாக உள்ளது. எனவே, மனுதாரரின் வயதை கருத்தில்கொண்டு இந்த காப்பீடு தொகையை 2 வாரங்களில் இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.