ஊட்டி, செப்.14: இண்டாம் சீசன் துவங்கி இரு வாரத்திற்கு மேல் ஆன நிலையில், மேரிகோல்டு மற்றும் சால்வியா போன்ற மலர்கள் பூத்துள்ளதால் இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர்.குறிப்பாக, கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.அதேபோல் பொதுவாக செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை விடுமுறைகள் தொடர்ந்து வரும் நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முதல் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதேபோல், இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தவில்லை என்றாலும், அதற்கு இணையாக மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.அதுமட்டுமின்றி பூங்கா முழுவதிலும் புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக்குலுங்கும். 2ம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் கடை பிடிக்கப்படுகிறது. இதற்காக பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகள் கடந்த ஒரு மாத்திற்கு முன் துவங்கியது. அதேபோல் 15 ஆயிரம் தொட்டிகளிலும் பல்வேறு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் துவக்கத்தில் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக்குலுங்கும்.
ஆனால், இம்முறை மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், பெரும்பாலான செடிகளில் மொட்டுக்கள் மட்டுமே காணப்படுகிறது.ஒரு சில தொட்டிகள் மற்றும் பாத்திகளில் மட்டும் மலர்கள் மட்டுமே பூத்துள்ளன. தற்போது பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மேரிேகால்டு மலர்கள் பூத்துள்ளன.அதேபோல், சால்வியா செடிகளிலும் மலர்கள் பூத்துள்ளன. இதனை தொலைவில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்தவுடன் அடுத்த வாரம் மாடங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக அடுக்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.