குன்னூர், ஜூலை 31 : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, சில அணைகளில் உபரிநீர் வெளியேறி வருகிறது. இருப்பினும் தற்போது கூடலூர், ஊட்டி போன்ற பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்து வந்தாலும் குன்னூர் பகுதிகளில் மழை குறைந்து, சாரல் மழை பெய்து வருகிறது.
காலை நேரங்களில் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு செல்லும் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக திமுக பொதுக்குழு உறுப்பினர் காளிதாசன், எடப்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு மலைக்காலங்களில் தங்களை பாதுகாக்கும் விதமாக மழை கால உடைகள் வழங்கி பள்ளி குழந்தைகளை ஊக்கப்படுத்தினார்.