ஊட்டி, ஜூலை 31: ஊட்டியில் காற்றுடன் கூடிய மழை தொடர்கிறது. கடும் குளிரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை பெய்யும். இந்த மழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசும்.
மேலும், எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும். இம்முறை முன்னதாகவே பருவமழை துவங்கியது. கடந்த மே மாதம் இறுதி வாரத்திலேயே மழை துவங்கியது. தொடர்ந்து, இரு மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் நாள் தோறும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. காற்று மற்றும் மழையின் காரணமாக கால நிலை மாற்றம் ஏற்பட்டு தற்போது குளிரும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஊட்டியில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல், பள்ளிச்செல்லும் குழந்தைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் மழை மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களிலும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.