கூடலூர், ஆக. 1: கூடலூரை அடுத்த தேவர் சோலை சர்க்கார்முலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற வனத்துறையினர் வாகனத்தை அந்த வழியாக சாலையில் நடமாடிய காட்டு யானை விரட்டியது. கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகளை கண்காணிக்கவும் ஊருக்குள் வரும் காட்டு யானைகளை விரட்டவும், வனத்துறையினர் இரவு நேரத்தில் வாகன ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு ரோந்து பணிகளில் ஈடுபடும் வனத்துறை வாகனங்களை காட்டு யானைகள் பலமுறை துரத்தி சேதப்படுத்தியும் உள்ளன.
இதேபோல் நேற்று முன்தினம் இரவு சர்க்கார் முலை பகுதியில் கூடலூர் தேவர் சோலை பிரதான சாலையில் நடமாடிய யானை ஒன்று அங்குள்ள கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து உள்ளது. தகவல் அறிந்து யானையை விரட்டுவதற்காக அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் வாகனத்தை யானை திடீரென விரட்டி உள்ளது. அப்போது வனத்துறையினர் வாகனத்தை வேகமாக அங்கிருந்து இயக்கி தப்பித்து உள்ளனர். தொடர்ந்து சாலையில் சிறிது நேரம் நடமாடிய யானையை வனத்துறையினர் டார்ச் லைட் அடித்து விரட்டினர். பின்னர் யானை தேயிலை தோட்டத்தின் வழியாக இறங்கி வேறு பகுதிக்கு சென்றுள்ளது.