Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்மேற்கு பருவமழை துவங்குவதால் விதைகளை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஊட்டி, மே 29: நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள விதைகளை பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊட்டி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் நவீன் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கோடை மழையை தொடர்ந்து ஜூன் மாதத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதால் விவசாயிகள் மற்றும் விதை விநியோகஸ்தர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதைகளை ஊட்டி ரோஸ் கார்டன், தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விதை பரிசோதனை நிலையத்தில் விதை மாதிரியை கொடுத்து விதை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்நிலையத்தில், விதையின் தர நிர்ணய காரணிகளான முளைப்பு திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 மட்டுமே பரிசோதனை கட்டணமாக செலுத்தி பயிர் மற்றும் ரகம், குவியல் எண் ஆகியவை குறித்த விவர சீட்டுகளை கொடுத்து விதையின் தரத்தை அறிந்து கொள்ளலாம். விதை பரிசோதனைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பிரதான காய்கறிகளுக்கான விதை மாதிரியின் குறைந்தபட்ச அளவுகள் வருமாறு:

கேரட், காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் 10 கிராம், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி 50 கிராம், பீன்ஸ் 450 கிராம், பட்டாணி 250 கிராம், பாலக்கீரை 25 கிராம், புரொக்கோலி, நூல்கோல் மற்றும் டர்னிப் 10 கிராம் ஆகும். இவ்வாறு பயிருக்கேற்ப குறைந்தபட்ச விதை மாதிரியை ஊட்டி, விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதை பரிசோதனை செய்து விதையின் தரத்தை அறிந்து விதைப்பதன் மூலம் தரமற்ற விதையினால் ஏற்படும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.