குன்னூர், ஜூலை 26: போதிய மழை இல்லாததால், குன்னூர் ரேலியா அணை நீர்மட்டம் 32 அடியாக சரிந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. குன்னூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பந்துமையில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் இந்த அணை உள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தால் ரேலியா அணையின் தண்ணீர் பற்றாகுறையாக இருப்பதால் குன்னூர் நகராட்சி பல்வேறு குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்தி உள்ளது. ரேலியா அணையின் நீராதாரமாக மைனலை நீரூற்று இருந்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர் பகுதியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையினால் அணை முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் அணை முழு கொள்ளளவில் இருந்தது. தற்போது ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள குடிநீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது வரை மழையின் அளவு குறைவாக பெய்துள்ளது. இதனால் முழு கொள்ளளவில் இருந்து வந்த ரேலியா அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து, தற்போது 32.11 அடியாக சரிந்து உள்ளது. மழை குறைவு என்ற போதிலும் குன்னூர் நகருக்கு தினசரி ரேலியா அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் இதன் காரணமாகவும் நீர்மட்டம் குறைவாக உள்ளது. ரேலியா அணை நீர்பிடிப்பு மற்றும் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தால் மட்டுமே அணை நிரம்ப வாய்ப்புள்ளது.