Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இணைப்பு சாலை அமைக்க எல்லையோர கிராம மக்கள் 48 ஆண்டு கோரிக்கை நிறைவேற நடவடிக்கை

மஞ்சூர், ஏப்.18: எல்லையோர கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கையான கிண்ணக்கொரை - கெத்தை இடையே இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமம் தமிழக கேரளா எல்லையோரத்தில் அமைந்துள்ளது. கிண்ணக்கொரையை சுற்றிலும் மேலூர், இரியசீகை, கீழ் தோட்டம், காமராஜ் நகர், இந்திராநகர், ஜே.ஜே.நகர், தனியகண்டி, அப்பட்டி, ஒசாட்டி, பிக்கட்டி உள்ளிட்ட குக்கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மஞ்சூரில் இருந்து மேல்குந்தா, தாய்சோலை, கேரிங்டன் வழியாக சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள கிண்ணக்கொரை கிராமத்திற்கு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே அமைந்துள்ளது.

பருவ மழை காலங்களில் இந்த சாலையில் மண் சரிவுகள் ஏற்பட்டும் மரங்கள் விழுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகும். அது போன்ற சமயங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதுடன் ஒரு சில சமயங்களில் நிலமை சீரடைய பல நாட்கள் ஆகிறது. போக்குவரத்து உள்ளிட்ட எவ்வித தொடர்பும் இல்லாமல் எல்லையோர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து கிண்ணக்கொரை கெத்தை இடையே இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நேரில் ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கிண்ணக்கொரை கிராமத்தில் ரோஜாவனம் மகளிர் சுய உதவிக்குழுவின் பாரம்பரிய உணவகத்தை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் மேற்படி கிண்ணக்கொரையில் இருந்து கெத்தைக்கு செல்லும் பகுதிக்கு சென்று இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிண்ணக்கொரை கெத்தை இடையே வருவாய், தனியார் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் குறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இது தொடர்பாக சர்வே பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதுகுறித்து கிண்ணக்கொரை பொதுமக்கள் கூறியதாவது: கிண்ணக்கொரை கெத்தை இடையே இணைப்பு சாலை அமைக்க வேண்டி தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் கடந்த 1972-74 ம் ஆண்டில் சுமார் 6.200 மீட்டர் மண் சாலை அமைக்கப்பட்டது. பஞ்சாயத்து ஒன்றிய அலுவலக பதிவேட்டிலும் இச்சாலை பதிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகள் அஞ்சலக தேவைகளுக்கும் மற்றும் மஞ்சூர், கோவை போன்ற பகுதிகளுக்கு செல்லவும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தார்கள்.

தொடர்ந்து கெத்தை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது. நாளடைவில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் முட்புதர்கள், செடி,கொடிகள் சூழ்ந்தது. தொடர்ந்து 2000மாவது ஆண்டில் பொதுமக்கள், இளைஞர்களின் தொடர் நடவடிக்கையால் நபார்டு வங்கியின் மூலம் மண் சாலையை தார் சாலையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் 1.600 கி.மீ துாரம் தார் சாலையாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 4.6 கி.மீ தூர சாலை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு வனத்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனால் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவில்லை. கிண்ணக்கொரை - கெத்தை இடையே இணைப்பு சாலை அமைப்பது குறித்து கடந்த 48 ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு கிராம மக்கள் கூறினர். இதையடுத்து இணைப்பு சாலை அமைக்க எல்லையோர கிராம மக்கள் 48 ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.