குன்னூர், நவ.28: குன்னூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.28 கோடி தேவைப்படுவதாக தமிழக அரசுக்கு நகர்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் சுசீலா, துணை தலைவர் வாசிம் ராஜா, ஆணையாளர் இளம்பரிதி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது வரவேற்புக்குறியதாக கூறி முதல்வருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில், குன்னூர் நகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான நியமன உறுப்பினர் கணேசனுக்கு தலைவர், துணை தலைவர் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்பு, கூட்டத்தில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மழை காலங்கள் துவங்கிய நிலையில் 30 வார்டுகளிலும் தெரு விளக்குகள், நடைபாதைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென்று குரல் கொடுத்தனர்.
மேலும், தற்போது எஸ்ஐஆர் படிவங்கள் நிரப்புவதில் அதிகாரிகளிடையே பல குழப்பங்கள் நீடித்து வருவதால் டிசம்பர் 4ம் தேதி வரை வழங்கியிருந்த கால அவகாசத்தை நீட்டித்து கூடுதலான கால அவகாசம் வழங்க வேண்டுமென்று தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும், குன்னூர் நகராட்சியில் நடந்து முடிந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 30 வார்டுகளிலும் தடுப்புச் சுவர்கள் நடைபாதைகள் கழிவு நீர் கால்வாய்கள் உட்பட பல்வேறு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.28 கோடி வரை வளர்ச்சி பணிகளுக்கான நிதி தேவைப்படுவதால் அதனை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

