ஊட்டி,நவ.28: நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே கேரி பேக் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் கப்புகள், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள்,கத்திகள்,முள் கரண்டிகள்,பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக்தட்டுகள் உட்பட 19 வகையாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தவிர ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்துபவர்கள் அவற்றை பயன்படுத்தி விட்டு பொது இடங்கள், வனங்களில் வீசி எறிகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்களில் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த, விற்பனை செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிளாஸ்டிக் தடை குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்து பயன்படுத்துகின்றனர். பின்னர் அவற்றை பொது இடங்களில் வீசி சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று வெலிங்டன் பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்றில் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தனியார் பஸ்சில் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள், தட்டுகள் அதிகளவு இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

