கூடலூர், டிச. 11: கடந்த மாதம் 24ம் தேதி மசினகுடியை அடுத்த மாவநல்லா பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் ஆடு மேய்த்த நாகியம்மாள் என்பவரை புலி தாக்கி இழுத்துச் சென்றது. தலை மற்றும் உடல் தனித்தனியாக கிடந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து, மூதாட்டியை தாக்கிய வயதான ஆண் புலியை பிடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நான்கு இடங்களில் கூண்டுகளும் வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை புலி கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.
வனத்துறையினர் இரவு, பகலாக டிரோன் கேமரா மூலமாகவும் மற்றும் 29 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மாவனல்லா சுற்றுவட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை இங்குள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் வனத்துறை வாகனம் மூலமாக ஏற்றிச்செல்லப்பட்டு வருகின்றனர்.
புலியை பிடிக்கும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


