Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி கடனுதவி, நலத்திட்ட உதவிகள்: ரூ.279.73 கோடியில் பயிர்கடன்

ஊட்டி, நவ. 18: ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான 72வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவில் 574 பயனாளிகளுக்கு ரூ.5.83 கோடி மதிப்பில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் அய்யனார் வரவேற்றார். மண்டல இணை பதிவாளர் சித்ரா திட்ட விளக்கவுரை ஆற்றினார். நீலகிரி தொகுதி எம்பி., ராசா, அரசு கொறடா ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் கூட்டுறவு வார விழா நவம்பர் 14ம் தேதி முதல் நவம்பர் 20ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தன்னிறைவிற்கான கருவிகளாக் கூட்டுறவுச் சங்கங்கள் எனும் கருப்பொருளை மையமாகக்கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. உள்ளாட்சித்துறைக்கு அடுத்தப்படியாக கூட்டுறவுத்துறை இருந்து வருகிறது. ஏனென்றால் ஏழை, எளிய சாமானிய மக்கள் எளிதில் நாடி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிதரும் துறையாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதுடன், கூட்டுறவுத்துறையின் மூலம் பெறப்பட்ட பல்வேறு கடன் உதவிகளை தள்ளுபடி செய்ததில் ஏழை, எளிய சாமானிய மக்கள் அதிகளவில் பயன்பெற்றனர்.

மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000, பெண்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடியல் பயணத்திட்டம், பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000, நான் முதல்வன் திட்டம், அன்புச்சோலை திட்டம் போன்ற திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவுத்துறையின் மூலம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், அத்தியவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் சிறப்பு திட்டமான தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் விவசாய கடன், மகளிர் சுயஉதவி குழுவின் கடன் மற்றும் நகை கடன் என ரூ.319.69 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில் சுமார் 39 ஆயிரத்து 231 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2024-25ம் நிதியாண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.279.73 கோடி மதிப்பில் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதனை பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும், என்றார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 12 பயனாளிகளுக்கு ரூ.7.74 லட்சம் மதிப்பில் பயிர் கடனுதவி, 10 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் கூட்டு பொறுப்பு குழு கடனுதவி, 47 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 483 பயனாளிகளுக்கு ரூ.5.33 கோடி மதிப்பில் சுய உதவி குழுக் கடனுதவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.99 ஆயிரம் மதிப்பில் பெண் தொழில் முனைவோர் கடன், 3 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற கடனுதவி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கடனுதவி,

9 பயனாளிகளுக்கு ரூ.7.05 லட்சம் மதிப்பில் சிறுபான்மையினருக்கான கடனுதவி, 2 பயனாளிகளுக்கு ரூ1.75 லட்சம் மதிப்பில் பிற்படுத்தப்பட்டோர் கடன் உதவிகளையும், ஒரு பயனாளிக்கு ரூ.5.60 லட்சம் அடமான கடனுதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.15.25 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவியும், 272 கிராம் தங்க நாணயமும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ், 16 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 574 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்து 600 மதிப்பில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்களுக்கு கேடயங்கள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பணியாளர்களுக்கு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மாணவியர்களுக்கும் பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக இன்கோசர்வ், ஆவின், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தோடர் கைவினை பொருட்கள், நீலகிரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை, பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்பு பொருட்கள் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், ஆவின் பொதுமேலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவினா தேவி, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர் முத்துகுமார், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டறவு வங்கி பொதுமேலாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கைத்துறை ஆலடி பெருமாள், இணை இயக்குநர் தேயிலை கணபதி, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் கமல்சேட், துணை கௌரி சங்கர், சரக துணை பதிவாளர் அஜித் குமார், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.