பந்தலூர்,அக்.11: நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் கட்டிடம் பந்தலூர் பஜாரில் உள்ளது.
இந்த வணிக வளாக கட்டிடத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை,அஞ்சலகம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகம், வக்கீல் ஆபீஸ் மற்றும் காய்கறி,மளிகைகடைகள்,பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. வணிக வளாகத்திற்கு முன்பாக உள்ள கான்கிரீட் பார்க்கிங் தளம் கடந்த பல வருடங்களுக்கு முன் போடப்பட்டது.
தற்போது பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகனங்கள் உள்ளே வந்து பார்க்கிங் செய்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது.
குண்டும் குழியுமான இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதால் மேலும் பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே நகராட்சி நிர்வாகம் குண்டும் குழியுமான பார்க்கிங் தளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.