கோபி, செப். 2: கோபி அருகே உள்ள காமராஜ் நகரில் சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாழைக்காய் வியாபாரி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள நம்பியூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிச்சாமி (37). வாழைக்காய் வியாபாரி. இவர் கடந்த 2 நாளுக்கு முன்பு காரில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பினார். உடனே அவர் ஈரோடு சென்று திரும்பிக்கொண்டிருந்தார்.
காமராஜ் நகரில் வந்தபோது கார் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பயணத்தினால் ஏற்பட்ட அசதியில் காரை ஓட்டும் போது விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.