கோத்தகிரி, செப்.2: கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை அதன் சுற்றுவட்டார கிராம பகுதியில் காட்டு யானைகள் உலா வருவதால் குடியிருப்புவாசிகள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த கிராமத்திற்கு அருகே உள்ள தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்ததைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து இரவு நேரத்தில் இங்குள்ள குடியிருப்பு பகுதியில் அந்த காட்டு யானைகள் உலா வந்தது. அங்குள்ள வீடுகளில் பெரும்பாலான வீடுகள் மண் குடிசைகளாக இருப்பதால், யானை வீடுகளை தாக்கினால் வீடு முழுவதுமாக சேதமடைந்து விடுமோ? என்கிற அச்சத்தில், மக்கள் சத்தம் போட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்திற்கு பின் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோத்தகிரி வனத்துறையினர் இடுக்கொரை கிராமத்தில் காட்டு யானைகளை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.