ஊட்டி, அக்.12: ஊட்டி அருகே பாதாள சாக்கடை பணியின்போது இரும்பு குழாய் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.குன்னூர் அருகே உள்ள சேலாஸ் கரும்பாலம் வாணி விலாஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கர்ணா (21). கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அதிகரட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கேத்தி பாலாடா பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கருணா உள்பட 10 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருணா மற்றும் 4 பேர் சேர்ந்து சுமார் 300 கிலோ எடையுள்ள இரும்பு குழாயை தூக்கியபோது மற்றவர்களுக்கு கைநழுவியதால் கர்ணா மீது இரும்பு குழாய் விழுந்தது.
இதில், கர்ணா குழாய்க்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக குழாயை அகற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக, லவ்டேல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த காண்ட்ராக்டர் ஈஸ்வரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். குழாய் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.