ஊட்டி, அக்.12: ஊட்டியில் நிலவிய கடும் மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி சென்றனர். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஏற்கனவே, நீலகிரி முழுவதும் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்கள் தொடர் மழையும், பகல் நேரங்களில் விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வானமே மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பிற்பகலுக்கு பின்னர், மேகமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் கடும் குளிர் நிலவியது.மேலும், ஊட்டி-கூடலூர், ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி- கோத்திகிரி நெடுஞ்சாலைகளில் சூழ்ந்த மேக மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினர்.இதற்கிடையே தாவரவியல் பூங்காவிலும் மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தாலும் தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.