ஊட்டி, ஆக.29: ஊட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான கலைத்திருவிழா தலையாட்டு மந்து பள்ளி வளாகத்தில் நடந்தது. மாணவர்களின் தனித் திறமைகளை வளர்க்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதனை முன்னிட்டு 2025-26ம் ஆண்டிற்கான கலை திருவிழா போட்டிகள், ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற மைய கருத்தின் அடிப்படையில், சோலாடா அரசு பள்ளி அளவில் நடைபெற்று முடிந்தது. இதன் அடுத்த கட்டமாக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை குறுவள மையமான தலையாட்டு மந்தில் ஊட்டி ஒன்றியம் போட்டிகள் நடந்தன.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஆஷா ஜெனிபர் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகஜோதி குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார். ஊட்டி ஒன்றிய ஆசிரிய பயிற்றுனர் ஜெகதீஷ் மற்றும் இக்குறுவள மையத்திற்குட்பட்ட 7 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப் போட்டி, களிமண் பொம்மைகள், மாறுவேட போட்டி மற்றும் நடன போட்டிகள் நடந்தது.