குன்னூர், ஆக.29: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் பகுதியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்களும், வனத்துறை கட்டுப்பாட்டில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில், லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் செல்லும் சாலை ஒரே வழிதடத்தில் இருப்பதால் தினந்தோறும் அந்த சாலையில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவது.
மேலும் அந்த வழித்தடத்தின் ஒரு பகுதி குன்னூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் செல்லும் சுற்றுலா தலத்தின் சாலைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த வாரம் துவங்கியது. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு குண்டும், குழியுமான சாலையை காங்கிரீட் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது அப்பகுதி வார்டு உறுப்பினர் பாக்கியவதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பத்மநாபன் உட்பட நகராட்சி அதிகாரிகள் என பலர் உடனிருந்தனர்.