ஊட்டி, ஆக. 27: ஊட்டி அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட காட்டேஜ்க்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாஸ்டர் பிளான் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ேவண்டுமாயின், வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டுமாயின், மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த குழுவிடம் அனுமதி பெற தாமதம் ஏற்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விதிமுறைகள் மீறி கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தனியார் காட்டேஜ்கள் ஆங்காங்கே முளைத்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியம் பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட தேனாடு தலக்காடுமட்டம் என்ற பகுதியில் விதிமுறை மீறி ஒரு காட்டேஜ் கட்டப்பட்டுள்ளது. விதிமுறை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.