கூடலூர், செப்.26: கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் மலைப்பகுதியில் இருந்து சிற்றாறுகள் உற்பத்தியாகி ஓடுகின்றன. இங்குள்ள புல்வெளிகள் வனப்பகுதிகள் வழியாக ஓடிவரும் ஆறுகளில் மழை வெள்ளநீர் தெளிந்த நீர் ஓடையாக செல்கிறது. தற்போது தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருவதால் இப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் பெரிய அளவிலான வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் தொடர்ச்சியாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஆறுகளில் தற்போது வரை மிதமாகவும் பளிங்கு போல் தெளிவாகவும் தண்ணீர் ஒரே சீரான அளவில் ஓடிக் கொண்டிருப்பது பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.
எனினும் இங்குள்ள ஆறுகளில் உற்பத்தியாகி வரும் மழை வெள்ளநீர் தமிழக பகுதிகளுக்கு எந்தவித பயனும் இன்றி கூடலூரின் தேவாலா மலைப்பகுதிகளில் இருந்து உற்பத்தியாகி வரும் பாண்டியாற்றுடன் இணைந்து கேரளா மாநிலம் வழியாக ஓடும் சாலியாற்றில் கலந்து அரபிக் கடலில் கலந்து விடுகிறது.