கூடலூர், ஆக.23: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புறமண வயல் பழங்குடியினர் குடியிருப்பில் 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீடுகளில் மேற்கூரைகளில் நீர் கசிந்து வீட்டிற்குள் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் இங்கு வசித்தவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். இவர்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் நீலகிரி மாவட்ட அமைப்பு சார்பில் மழைக்கால நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
புறமண வயல் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 45 குடும்பங்களுக்கு தலா ரூ.7000 மதிப்பில் தார்ப்பாய், போர்வை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடலூர் தாசில்தார் முத்துமாரி, இந்திய செஞ்சிலுவை சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ், கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீலகிரி ஆதிவாசி நல சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயா தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.