குன்னூர்,ஆக.23: நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத் நகர் மற்றும் கல்குழி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கல்குழி பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஏறி செல்ல முடியாதவாறு உயரமான இடத்திலும்,சம்பந்தமில்லாத இடத்திலும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால் அந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிய நிலையில் கிடக்கின்றது.
இவ்வாறு பயனற்ற முறையில் கிடந்து வரும் நிழற்குடைக்குள் வாகனங்களில் வரும் சிலர் மது அருந்துவது உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, அப்பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு பொதுமக்கள் பயன்பெறும் இடத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.