கோத்தகிரி, நவ.22: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தளமாக திகழ்கிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
தற்போது குளிர் காலம் என்பதாலும் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக நிலவும் குளிர்ந்த காலநிலை, இதமான காலநிலையில், இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும்,
அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.


