ஊட்டி, நவ.22: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணி தாவரங்கள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன. அதேபோல், பல வெளி நாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடிகள் இங்கு உள்ளது.
இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இத்தலியன் பூங்காவில் பனிக்காலத்தில் குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் பிப்வரி மாதம் வரை பூக்கும் தன்மையை கொண்ட அஜிலியா மலர் செடியில் தற்போது அதிகளவு மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியது. சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும்.
2ம் சீசன் முடிந்த நிலையில், பூங்காவில் உள்ள பெரும்பாலான மலர் செடிகள் அகற்றப்பட்டது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இந்நிலையில் தற்போது இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அஜிலியா மலர்களே சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாகவும், புகைபடம் எடுக்கவும் பயன்பட்டு வருகிறது.


