குன்னூர், செப்.19: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டேரி, பெட்போர்ட், வண்டிச்சோலை, அருவங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் மதியம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக காலை நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் மத்தியில் மதியம் 12 மணி மேல் கடும் மேக மூட்டமும், கனமழையும் பெய்தது. இதனால் தேயிலை தோட்ட மற்றும் மலை தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திடீர் மழையால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களும், சாலையோர வியாபாரிகளும் அவதி அடைந்தனர். இதேபோன்று நேற்று பந்தலூர் பஜார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்ப குதிகளில் கனமழை பெய்தது.
அதனால் பஜார் மற்றும் காலனி சாலை, சர்வீஸ் ஸ்டேசன் சாலை, பாறைக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேகமூட்டத்துடன் கூடிய மழையால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு இயக்கினர். வெளுத்துவாங்கிய மழையால் பள்ளி மாணவர்கள் அவதியடைந்தனர்.