கூடலூர், அக்.17: முதுமலை மற்றும் கூடலூர் வனப்பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் காட்டு பன்றிகள் இறந்திருப்பதும், அவற்றில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வைரஸ் இருப்பதையும் கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் கால்நடை துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கூடலூரை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியான நாடுகாணி சோதனைச் சாவடியில் நேற்று கால்நடை துறையினர் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் சோலாடி, தாளூர், பட்டவயல், நம்பியார் சோதனைச் சாவடிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.