பாலக்காடு, அக்.17: பாலக்காடு மாவட்டம் சித்தூர் கடைவீதியில் அமைந்துள்ள குமாரநாயக சுப்ரமணியர் சுவாமி கோவிலில் 148வது ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா அக்.27ம் தேதி நடைபெறுகிறது. இக்கோவிலில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி அக்.22ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோம பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் ஆகிறது. அன்றையதினம் காலை 7 மணிக்கு விழாக் கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து விஷேச பூஜைகளும் நடைபெறவுள்ளது.
அக்.22ம் தேதி முதல் அக்.26ம் தேதி வரை இரவு 7 மணி முதல் இரவு 8.30 வரையிலாக சித்தூர்-தத்தமங்கலம் ஜெய கிருஷ்ணனின் கந்தப்புராண சொற்பொழிவு நடைபெறுகிறது. தொடர்ந்து பஜனை நிகழ்ச்சியும் நடக்கின்றன. அக்.27ம் தேதி காலை 8 மணிக்கு சித்தூர் சோகநாஷினி நதியிலிருந்து செண்டை வாத்யங்களுடன் யானை மீது தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு சுவாமி அபிஷேக - அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வீரபாகு சமேத முருகப்பெருமான், சூரர்களுடன் வீதியுலா சித்தூர் வட்டாரத்தில் நடைபெற்ற பின் இரவு 7 மணியளவில் சூரர்களை வதைக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகின்றன.