பாலக்காடு, செப்.17: ஒத்தப்பாலம் தாலுகா பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஒத்தப்பாலம் போலீசாரும், போதை தடுப்புப்பிரிவு போலீசாரும் ஒத்தப்பாலம் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, ஒத்தப்பாலம் தெற்கு பனமண்ணா அருகே கண்ணியம்புரம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து 6 பேர் சட்டவிரோதமாக பட்டாசுகள் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார் திடீரென அந்த வீட்டில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 20 பெட்டிகளில் பட்டாசுகள், 49 கிராம் எம்டிஎம்ஏ, 600 கிராம் கஞ்சா பொட்டலம் ஆகியவை வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் குளப்புள்ளியைச் சேர்ந்த விக்னேஷ் (26), சணல் (27), ஷொர்ணூர் கணேஷகிரியைச் சேர்ந்த ஷபீர் (39), ஒத்தப்பாலம் புளக்குண்டைச் சேர்ந்த முகமது முஸ்தபா (24), ஷாபி (27), காஞ்ஞிரக்கடவை சேர்ந்த ஷானிப் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை செய்வதற்கிடையில் மறைமுகமாக போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து ஒத்தப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.