கூடலூர், அக். 16: தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கூடலூர் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூடலூர் ஆர்டிஓ குனசேகரன் கூட்டத்துக்கு தலைமை வகித்து விவசாயிகள் மத்தியில் குறைகளை கேட்டறிந்தார். தாசில்தார் முத்துமாரி மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தோட்டக்கலைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
வேளாண் பொறியியல் துறை, வேளான் வணிகத்துறை, கால்நடைகள் பராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நீர்வளத்துறை, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஊட்டி, மின்சார வாரியம் ஆகிய துறைகளைச்சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு துறை மூலமாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். தோட்டக்கலைத்துறை வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை இணைந்து விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.