குன்னூர், அக்.16: நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, காட்டு மாடுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வருவதால், அவ்வப்போது மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று குன்னூர் - ஊட்டி சாலையில் உள்ள எம்.ஜி காலனி பகுதியில் ஒரு காட்டு மாடு வலம் வந்தது.
இதனால், இவ்வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்வழியாக வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த காட்டு மாட்டினை புகைப்படம் எடுத்தனர். மேலும், குன்னூர் அருகேயுள்ள பாய்ஸ் கம்பெனி, கேட்டில்பவுண்ட் போன்ற பகுதிகளில் இதே காட்டுமாடு சுற்றி திரிவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், இரவு நேரங்களில் பணிகளுக்கு சென்று வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் உணவு தேடி உலா வரும் காட்டு மாட்டை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.