பந்தலூர், ஆக. 15: பந்தலூர் அருகே சீப்புண்டி கறிக்குற்றி சாலை பணி துவக்கி வைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பந்தலூர் அருகே எருமாடு கிராமம் சீப்புண்டி முதல் கறிக்குற்றி வரையுள்ள சாலை சீரமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். தினந்தோறும் ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றது .
பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். நீலகிரி எம்பி ஆ.ராசா பரிந்துரையின் படி சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தனர்.இந்த பணியினை பந்தலூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ராஜா என்கிற ராஜ்குமார் துவக்கி வைத்தார். தார்சாலை பணி துவக்கி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.