மஞ்சூர், டிச. 13: ஓணிகண்டி பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது ஓணிகண்டி. மஞ்சூர்- கோவை பிரதான சாலையில் அமைந்துள்ளது. கோவை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து காரமடை, முள்ளி, கெத்தை வழியாக மஞ்சூர் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் அனைத்தும் ஓணிகண்டி வழியாகவே சென்று வரவேண்டும். இதேபோல் கேரளா மாநிலம் அட்டபாடி, அகழி, மண்னார்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீலகிரி வரும் பயணிகளின் வாகனங்களும் இந்த வழியாகவே சென்று வருகிறது.
இது மட்டுமின்றி பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் ஓணிகண்டி வழியாகவே செல்லவேண்டும். இதனால் ஓணிகண்டி பகுதியில் வாகனப் போக்குவரத்து மிகுதியாக காணப்படும். குறிப்பாக ஓணிகண்டி கடைவீதி வழியாக வாகனங்கள் சென்று வரும்போது பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிவேக வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஓணிகண்டி கடைவீதியில் 2 இடங்களில் வேகத்தடைகளை அமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


