பந்தலூர், நவ.13: பந்தலூர் அருகே குந்தலாடி ஓர்கடவு பகுதியில் இருந்து பாக்கனா செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி ஓர்கடவு முதல் பாக்கனா, புத்தூர்வயல் செல்லும் சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பசுந்தேயிலை ஏற்றிச் செல்லும் லாரிகள், பள்ளி வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றது. பழுதடைந்துள்ள சாலையில் வாகனங்களை இயக்குவதில் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த இடங்களில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
