கோத்தகிரி, ஆக. 13: கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்ட பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாடும் வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்கள் கொண்டதாக உள்ளது. இதனால், சிறுத்தை, கரடி, காட்டுமாடு, புலி, யானை, உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.
இரவு நேரங்களில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் நடமாடி வருவது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்ட பகுதியில் பகல் மற்றும் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வனத்துறையினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.