பந்தலூர், ஆக. 13:பந்தலூர் அருகே அத்திமாநகர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை நடமாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அத்திமாநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. யானையை பார்த்த மக்கள் யானையிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு கூச்சலிட்டனர். அதன்பின் யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது.
எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை, யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தேவாலா வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு தேடி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. எனவே, காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.