பந்தலூர், ஆக. 13: அரசு பேருந்து ஓட்டுநருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் பயணிகளுடன் பேருந்தை இடையில் நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. கூடலூர் அரசு போக்குவரத்து கழகம் கிளையில் இருந்து சேரம்பாடி பகுதிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தை ஓட்டுநர் மது (45), நேற்று சேரம்பாடியில் இருந்து கூடலூர் நோக்கி செல்லும் போது பந்தலூர் பஜார் பகுதிக்கு வரும் போது திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
சுதாகரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் அதிகரித்து சக்கரை அளவு குறைந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேருந்தை மாற்று ஓட்டுநர் மூலம் கூடலூருக்கு இயக்கப்பட்டது, அதில் ஓட்டுநர் மதுவும் பயணித்துள்ளார் ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதிய ஓட்டுநர்கள் மட்டும் நடத்துனர்கள் இல்லாததால் பணியில் இருக்கும் ஓட்டுநர்கள் கூடுதலாக பணி செய்யவேண்டிய கட்டாயத்தால் ஒரு சில ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.