ஊட்டி, செப். 12: ஊட்டி- கோத்தகிரி சாலையில் இருந்து பூங்கா செல்லும் நடைபாதை மது அருந்தும் கூடாரமாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி- கோத்தகிரி சாலையில் உழவர்சந்தை அருகே உள்ள பாலத்தை ஒட்டி நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை வழியாக சென்றால் பூங்கா சாலைக்கு செல்ல முடியும். இதனால் இச்சாலையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
ஒதுக்குபுறமாக உள்ள இந்த நடைபாதை இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாகவும் மது அருந்தும் பாராகவும் மாறி காட்சியளிக்கிறது. மது அருந்தும் குடிமகன்கள் மதுபாட்டில்களை நடைபாதைகளிலேயே வீசி செல்வது, குடிபோதையில் நடைபாதையை அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் நடைபாதையில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பகல் நேரங்களில் நடைபாதையை பயன்படுத்துவோர் மூக்கை மூடிக்கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் மறறும் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி நடைபாதையை தூய்மைப்படுத்துவதுடன் அசுத்தம் செய்வதை தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.