குன்னூர், செப். 11: டார்லிங்டன் பிரிட்ஜ் பகுதியில் புதர்மண்டிய ஓடையை தூர்வார வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான டார்லிங்டன் பிரிட்ஜ், அம்பேத்கார் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. அப்பகுதியில் வீசப்படும் குப்பைகளும், கழிவுநீரும் அங்குள்ள ஓடையில் செல்கின்றன. ஓடை முழுவதும் இருபுறமும் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.
ஓடையின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதோடு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கிவரும் சூழலில், அப்பகுதியில் புதர்மண்டிய ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.