ஊட்டி, ஆக.11: ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஊட்டியில் ஆடிபூர கஞ்சி கலய ஊர்வலம் நேற்று நடந்தது. ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிபூரத்தை முன்னிட்டு கஞ்சி கலய ஊர்வலம் நடைபெறும். இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில் இந்தாண்டுக்கான கஞ்சி கலய ஊர்வலம் நேற்று ஊட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள பாறை முனீஸ்வரர் கோயில் அருகில் இருந்து துவங்கியது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் ஊர்வலமாக சென்றனர். மெயின்பஜார், மாரியம்மன் கோயில் வழியாக கமர்சியல் சாலை, கோத்தகிரி சாலை வழியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றத்தில் ஊர்வலம் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.