ஊட்டி, அக். 9: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வரும் 11ம் தேதி நடைபெறும் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக் 2., காந்தி ஜெயந்தி, ஜனவாி 26 குடியரசு தினம், ம 1 தொழிலாளர் தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன்படி வரும் 11ம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: வரும் 11ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இது தவிர பல்வேறு பொருள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.