மஞ்சூர், ஆக.9: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வசிப்பவர் பேபி. மஞ்சூர் ரேஷன் கடையில் ஊழியராக வேலை செய்து வரும் பேபி தனது வீட்டில் ரோஜா, நிஷாகந்தி உள்பட பலவகையிலான பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தொட்டியில் வைக்கப்பட்டிருந்த செடியில் நிஷாகந்தி மலர் ஒன்று பூத்தது. வெண்மை நிறத்தில் பூத்துள்ள இந்த நிஷாகந்தி மலர் மாலையில் பூத்து மறுநாள் காலையில் வாடும் தன்மை கொண்டது.
இரவின்ராணி என்றும் பிரம்மகமலம் என்றும் அழைக்கப்படும் இந்த மலரின் தாவரவியல் பெயர் ‘எபிபைலம் ஆக்சிபெலடம்’ என்பதாகும். வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த நிஷாகந்தி மலர் ஆண்டுக்கொருமுறை ஜூன், ஜூலை மாதங்களில் பூக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பேபியின் வீட்டில் பூத்துள்ள இந்த அதிசய நிஷாகந்தி மலரை சிவ பெருமானுக்கு உகந்தது என்பதால் இந்த மலர் செடி அருகே பேபி விளக்குகளை ஏற்றி பூஜை செய்து வழிபட்டார்.