பந்தலூர், நவ. 6: பந்தலூர் அருகே உப்பட்டி அரசு பழங்குடியினர் ஐடிஐயில் மேங்கிங் ஐடிஐ திட்டத்தின் மூலம் பல்புகள் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் அரசு பழங்குடியினர் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐயில் எலக்ட்ரிஷன், வெல்டர், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதுகுறித்து ஐடிஐ முதல்வர் நவுசாத் கூறுகையில், ‘‘மாணவர்கள் பயிற்சி பெற்றால் மட்டும் போதாது மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மேங்கிங் இந்தியா திட்டம் மாதிரி மேங்கிங் ஐடிஐ என்ற திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் மாணவர்களுக்கு பல்பு தயாரிக்க பயிற்சி கொடுத்து தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பீஸ் போன பல்புகளை ரிப்பேர் செய்யவும் பயிற்சி பெற்று வருகின்றனர். நாங்கள் தயாரிக்கும் பல்புகளை சந்தைப்படுத்துவதற்கான குறியீடு மற்றும் அரசு அங்கீகாரம் பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் எங்களை ஊக்கப்படுத்தி அரசு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது’’ என்றார்.
