ஊட்டி, நவ. 6: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே செம்மனாரை பழங்குடியின கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் கோத்தகிரி கிளையில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி காலை மற்றும் மதிய வேளைகளில் கூடுதல் நடை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று காலை 9.10 மற்றும் மதியம் 1.10க்கு செம்மனாரை கிராமத்தில் இருந்து கூடுதல் நடை பஸ் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.
இதனை தொடர்ந்து கூடுதல் நடை பஸ் சேவை இயக்கும் நிகழ்ச்சி செம்மனாரை கிராமத்தில் நடந்தது. தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொது மேலாளர் ஜெய்சங்கர், உதவி மேலாளர் (வணிகம்) பாஸ்கரன், கோத்தகிரி கிளை மேலாளர் ஞானபிரகாசம், தொமுச., நீலகிரி மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன், மண்டல பொருளாளர் ஆனந்தன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
