பாலக்காடு, செப்.24: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் பாதுகாக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை, 42 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒத்தப்பாலம் ரயில் நிலையம் கிழக்கு மாயணூர் மேம்பாலம் அருகே தனியாக வசிப்பவர் ஆனந்தி (46). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த நேரத்தில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து பீரோ கதவை உடைத்து தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். தொடர்ந்து, ஆற்றுக்கு சென்ற ஆனந்தி மீண்டும் வீடு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகைகள் மற்றும் 42 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஒத்தப்பாலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.